ரோமாபுரியில் பவுல்
பவுலின் கைகளில் கட்டப்பட்டுள்ள அந்தச்
சங்கிலியைப் பார், அதோ, அவரைக் காவல் காக்கும் அந்த ரோமப் படைவீரனும் அங்கு
இருக்கிறான். பவுல் ரோமாபுரியில் கைதியாக இருக்கிறார். தன்னை என்ன
செய்வதென்று ரோம இராயன் தீர்மானிக்கும் வரை அவர் அங்கேயே காத்திருக்க
வேண்டியிருக்கிறது. கைதியான அவரைப் போய் பார்க்க ஆட்கள்
அனுமதிக்கப்படுகிறார்கள்.
பவுல் ரோமாபுரிக்குப் போய்ச் சேர்ந்து
மூன்று நாட்களுக்குப் பிறகு, சில யூத தலைவர்கள் தன்னை வந்து பார்க்குமாறு
சொல்லி அனுப்புகிறார். அதன்படி, ரோமாபுரியிலுள்ள பல யூதர்கள் வருகிறார்கள்.
பவுல் அவர்களுக்கு இயேசுவைப் பற்றியும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும்
பிரசங்கிக்கிறார். பவுல் சொல்வதைச் சிலர் நம்பி கிறிஸ்தவர்களாக ஆகிறார்கள்,
மற்றவர்கள் நம்புவதில்லை.
![]() |
சிறையில் பவுல் |
அதோடு, தன்னைக் காவல் காக்கிற வெவ்வேறு படைவீரர்களிடமும் பவுல்
பிரசங்கிக்கிறார். தான் இங்கே கைதியாக வைக்கப்பட்ட இரண்டு வருஷங்களில்
முடிந்தளவு எல்லோருக்கும் பவுல் பிரசங்கிக்கிறார். இதன் விளைவாக, இராயனுடைய
வீட்டாரும் ராஜ்ய நற்செய்தியைக் கேட்கிறார்கள். அப்படிக் கேட்டவர்களில்
சிலர் கிறிஸ்தவர்களாக ஆகிறார்கள்.
மேஜையில் எழுதிக்கொண்டிருக்கிற
இவர் யார்? உன்னால் ஊகிக்க முடிகிறதா? ஆம், பவுலைப் பார்க்க வந்திருந்த
தீமோத்தேயுவே அவர். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பிரசங்கித்ததற்காக
அவரும் சிறையில் இருந்திருந்தார். ஆனால் மறுபடியும் விடுதலை
ஆகியிருக்கிறார். இங்கே பவுலுக்கு உதவி செய்ய இப்போது வந்திருக்கிறார்.
அவர் என்ன எழுதுகிறார் என்று உனக்குத் தெரியுமா? நாம் பார்க்கலாம்.
110-ம் கதையில்
குறிப்பிடப்பட்ட பிலிப்பி, எபேசு என்ற பட்டணங்கள் உனக்கு நினைவிருக்கிறதா?
இந்தப் பட்டணங்களில் கிறிஸ்தவ சபைகளைத் தொடங்க பவுல் உதவி செய்தார்.
இப்போது சிறையில் இருந்து அந்தக் கிறிஸ்தவர்களுக்கு பவுல் கடிதங்களை
எழுதுகிறார். இந்தக் கடிதங்கள் பைபிளில் இருக்கின்றன, அவை எபேசியர்,
பிலிப்பியர் என்று அழைக்கப்படுகின்றன. பிலிப்பியிலுள்ள தங்கள் கிறிஸ்தவ
நண்பர்களுக்கு என்னென்ன எழுத வேண்டுமென்று பவுல் இப்போது
தீமோத்தேயுவுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இந்தப்
பிலிப்பியர் பவுலிடம் மிகவும் அன்பாக இருந்திருக்கிறார்கள். இங்கே
சிறையிலிருக்கும் அவருக்கு ஒரு பரிசை அனுப்பினார்கள். அதனால் பவுல்
அவர்களுக்கு நன்றி சொல்லி எழுதுகிறார். இந்தப் பரிசைக் கொண்டு வந்தவர்
எப்பாப்பிரோதீத்து. ஆனால் அவர் ரொம்பவும் உடம்பு சரியில்லாமல் சாகும்
நிலைக்கு வந்துவிட்டார். இப்போது சுகமாகி திரும்ப வீட்டுக்குப் போக தயாராக
இருக்கிறார். பிலிப்பிக்குத் திரும்பும்போது, பவுலும் தீமோத்தேயுவும்
கொடுத்தனுப்புகிற இந்தக் கடிதத்தை அவர் எடுத்துக்கொண்டு போவார்.
சிறையில் இருக்கும்போது பவுல் மேலும் இரண்டு கடிதங்களை எழுதுகிறார், இவை
பைபிளில் இருக்கின்றன. ஒன்று கொலோசெ பட்டணத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கு
எழுதப்பட்டது. அதற்கு என்ன பெயர் என்று உனக்குத் தெரியுமா? அது கொலோசெயர்
என்றழைக்கப்படுகிறது. மற்றொன்று பவுலின் நெருங்கிய நண்பரான
பிலேமோனுக்கென்றே எழுதப்பட்ட ஒரு கடிதம், இவரும்கூட கொலோசெயில் வாழ்கிறார்.
இந்தக் கடிதம் பிலேமோனின் வேலைக்காரனான ஒநேசிமுவைப் பற்றியது.
ஒநேசிமு பிலேமோனிடமிருந்து ரோமாபுரிக்கு ஓடி வந்துவிட்டிருந்தார். பவுல்
இங்கே சிறையில் இருப்பதை ஒநேசிமு எப்படியோ தெரிந்து கொண்டு அவரைப் பார்க்க
வந்தார். அப்போது பவுல் ஒநேசிமுவுக்கு பிரசங்கித்தார். சீக்கிரத்தில்
ஒநேசிமுவும் கிறிஸ்தவரானார். இப்பொழுது ஒநேசிமு தான் ஓடி வந்ததைப் பற்றி
வருத்தப்படுகிறார். அதனால் இந்தக் கடிதத்தில் பிலேமோனுக்கு பவுல் என்ன
எழுதுகிறார் என்று உனக்குத் தெரியுமா?
ஒநேசிமுவை மன்னிக்கும்படி
பிலேமோனை பவுல் கேட்டுக்கொள்கிறார்: ‘நான் அவரை உன்னிடம் திரும்ப
அனுப்புகிறேன். ஆனால் இப்போது அவர் உன்னுடைய வேலைக்காரன் மட்டும் அல்ல. ஒரு
நல்ல கிறிஸ்தவ சகோதரனும்கூட’ என்று பவுல் எழுதுகிறார். ஒநேசிமு
கொலோசெக்குத் திரும்பிப்போனபோது இந்த இரண்டு கடிதங்களையும், அதாவது
கொலோசெயருக்கும் பிலேமோனுக்கும் எழுதப்பட்ட கடிதங்களைக் கொண்டு போகிறார்.
தன்னுடைய வேலைக்காரன் கிறிஸ்தவராகி விட்டார் என்று பிலேமோனுக்கு தெரிய
வந்ததும் அவர் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து
பார்க்கலாம்.
பிலிப்பியருக்கும் பிலேமோனுக்கும் உண்மையிலேயே ஒரு
நல்ல செய்தியை பவுல் எழுதுகிறார். ‘நான் தீமோத்தேயுவை உங்களிடம்
அனுப்புகிறேன், ஆனால் சீக்கிரத்தில் நானும்கூட உங்களிடம் வருவேன்’ என்று
பிலிப்பியருக்கு எழுதுகிறார். பிலேமோனுக்கு எழுதுகையில், ‘அங்கே
தங்குவதற்காக எனக்கு ஓர் இடத்தை தயார் செய்’ என்று எழுதுகிறார்.
பவுல் விடுதலையானதும் பல இடங்களிலுள்ள கிறிஸ்தவ சகோதரர் சகோதரிகளைப் போய்ப்
பார்க்கிறார். ஆனால் பிற்பாடு பவுல் மறுபடியும் ரோமாபுரியில் கைது
செய்யப்படுகிறார். இந்தத் தடவை தான் கொல்லப்படுவார் என்பது அவருக்குத்
தெரிந்திருந்தது. அதனால் தீமோத்தேயுவுக்கு கடிதம் எழுதி சீக்கிரமாய்
வருமாறு அவரைக் கேட்கிறார். ‘நான் கடவுளுக்கு உண்மையுள்ளவனாய்
இருந்திருக்கிறேன். கடவுள் எனக்கு நிச்சயம் பலனளிப்பார்’ என்று பவுல்
எழுதுகிறார். பவுல் கொல்லப்பட்டு ஒரு சில வருஷங்களுக்குப் பிறகு, எருசலேம்
மறுபடியுமாக அழிக்கப்படுகிறது. இந்த முறை ரோமர்களால் அழிக்கப்படுகிறது.
பைபிளில் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. வெளிப்படுத்துதல் புத்தகம்
உட்பட பைபிளின் கடைசி புத்தகங்களை அப்போஸ்தலனான யோவான் எழுதும்படி யெகோவா
தேவன் செய்கிறார். பைபிள் புத்தகமான வெளிப்படுத்துதல் எதிர்காலத்தைப்
பற்றிச் சொல்கிறது. அப்படியென்றால் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது?
அதைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.
அப்போஸ்தலர் 28:16-31; பிலிப்பியர் 1:13; 2:19-30; 4:18-23; எபிரெயர் 13:23; பிலேமோன் 1-25; கொலோசெயர் 4:7-9; 2 தீமோத்தேயு 4:7-9.
கேள்விகள்
- ரோமாபுரியில் கைதியாக இருக்கிற பவுல் யாரிடம் பிரசங்கிக்கிறார்?
- இந்தப் படத்தில், மேஜையில் எழுதிக்கொண்டிருப்பவர் யார், பவுலுக்காக அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
- எப்பாப்பிரோதீத்து என்பவர் யார், அவர் பிலிப்பிக்குத் திரும்பும்போது எதைக் எடுத்துக்கொண்டு போகிறார்?
- பவுல் தன்னுடைய நெருங்கிய நண்பரான பிலேமோனுக்கு ஏன் கடிதம் எழுதுகிறார்?
- பவுல் விடுதலையானதும் என்ன செய்கிறார், பிற்பாடு அவர் என்ன செய்யப்படுகிறார்?
- பைபிளின் கடைசி புத்தகங்களை எழுதுவதற்கு யெகோவா யாரைப் பயன்படுத்துகிறார், வெளிப்படுத்துதல் புத்தகம் எதைப் பற்றி சொல்கிறது?
கூடுதல் கேள்விகள்
- அப்போஸ்தலர் 28:16-31; பிலிப்பியர் 1:13-ஐ வாசி.
ரோமாபுரியில் கைதியாக இருந்தபோது பவுல் தன்னுடைய நேரத்தை எப்படிப்
பயன்படுத்தினார், அவரது உறுதியான விசுவாசத்தால் கிறிஸ்தவ சபையில்
இருந்தவர்கள் என்ன செய்யத் தூண்டப்பட்டார்கள்? (அப். 28:23, 30; பிலி.
1:14)
- பிலிப்பியர் 2:19-30-ஐ வாசி. தீமோத்தேயுவையும்
எப்பாப்பிரோதீத்துவையும் பற்றி பெருமிதத்துடன் பவுல் சொன்ன வார்த்தைகள்
யாவை, பவுலின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (பிலி. 2:20, 22,
25, 29, 30; 1 கொ. 16:18; 1 தெ. 5:12, 13)
- பிலேமோன் 1-25-ஐ வாசி.
(அ) எதன் அடிப்படையில் சரியானதைச் செய்யும்படி பிலேமோனை பவுல்
அறிவுறுத்தினார், இன்று மூப்பர்களுக்கு இது எவ்வாறு ஒரு வழிகாட்டியாக
இருக்கிறது? (பிலே. 9; 2 கொ. 8:8; கலா. 5:13)
(ஆ) சபையிலிருந்த மற்றவர்களின் மனசாட்சியை பவுல் மதித்தார் என்பதை பிலேமோன் 13, 14 வசனங்கள் எப்படிக் காட்டுகின்றன? (1 கொ. 8:7, 13; 10:31-33)
- இரண்டு தீமோத்தேயு 4:7-9-ஐ வாசி.
இறுதிவரை உண்மையோடு நிலைத்திருந்தால் யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார் என
அப்போஸ்தலன் பவுல் உறுதியாக நம்பியது போல நாமும் எப்படி நம்பலாம்? (மத்.
24:13; எபி. 6:10)
No comments:
Post a Comment