மறுபடியும் உயிர் பெறுகிற இரண்டு பையன்கள்
ஒருவேளை நீ செத்துப் போய், மறுபடியும்
உயிரோடு வந்தால் உன் அம்மாவுக்கு எப்படியிருக்கும் என்று நினைக்கிறாய்?
அம்மாவுக்கு ரொம்பவும் சந்தோஷமாகிவிடும் இல்லையா? ஆனால் செத்துப்போன ஓர்
ஆள் மறுபடியும் உயிரோடு வர முடியுமா? முன்பு எப்போதாவது அப்படி
நடந்திருக்கிறதா?
இங்கேயுள்ள அந்த நபரையும் பெண்ணையும் சின்னப்
பையனையும் பார். அந்த நபர்தான் எலியா தீர்க்கதரிசி. அந்தப் பெண் சாறிபாத்
பட்டணத்திலுள்ள ஒரு விதவை, அந்தப் பையன் அவளுடைய மகன். ஒருநாள் அவனுக்கு
உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை மோசமாகி,
கடைசியில் அவன் செத்தே போய்விடுகிறான். அப்போது எலியா அந்தப் பெண்ணிடம்:
‘பையனை என்னிடம் கொடு’ என்கிறார்.
![]() |
எலியாவும் உயிர்த்தெழுப்பப்பட்ட மகனுடன் ஒரு விதவையும் |
செத்தப் பிள்ளையை மேல் மாடிக்கு எலியா தூக்கிச் சென்று அவனைப்
படுக்கையின் மேல் கிடத்துகிறார். பின்பு: ‘யெகோவா தேவனே, இந்தப் பையனுக்கு
மறுபடியும் உயிர் கொடும்’ என்று ஜெபிக்கிறார். ஜெபித்து முடித்ததுமே,
அந்தப் பையனுக்கு மூச்சு வந்துவிடுகிறது! அப்போது எலியா அவனைத் திரும்பவும்
கீழே கொண்டு போய்: ‘இதோ பார், உன் மகன் உயிரோடிருக்கிறான்!’ என்று அந்தப்
பெண்ணிடம் சொல்கிறார். மகனைப் பார்த்ததும் அந்த அம்மாவுக்கு ரொம்ப
சந்தோஷமாகி விடுகிறது.
யெகோவாவின் மற்றொரு முக்கிய
தீர்க்கதரிசியின் பெயர் எலிசா. இவர் எலியாவின் உதவியாளராக சேவை செய்கிறார்.
என்றாலும், அற்புதங்கள் செய்வதற்காக ஏற்ற காலத்தில் எலிசாவையும் யெகோவா
உபயோகிக்கிறார். ஒருநாள் சூனேம் பட்டணத்துக்கு எலிசா போகிறார், அங்கே ஒரு
பெண் அவரை ரொம்ப அன்பாக உபசரிக்கிறாள். பிற்பாடு இந்தப் பெண்ணுக்கு ஒரு
மகன் பிறக்கிறான்.
கொஞ்சம் பெரியவனாக வளர்ந்த பின்பு, அவன்
ஒருநாள் காலை வயலில் வேலை செய்து கொண்டிருக்கிற தன் அப்பாவிடம் செல்கிறான்.
அப்போது திடீரென்று, ‘ஐயோ, என் தலை வலிக்கிறது!’ என்று கத்துகிறான். அவனை
வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள், ஆனால் அந்தப் பையன்
செத்துப்போகிறான். அவனுடைய அம்மாவுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்!
உடனடியாக எலிசாவை அழைத்து வருகிறாள்.
எலிசா வந்ததும், செத்துப்போன
அந்தப் பிள்ளையை தூக்கிக்கொண்டு ஒரு அறைக்குள் போகிறார். யெகோவாவிடம்
ஜெபித்துவிட்டு, அந்தப் பிள்ளையின் மேல் படுக்கிறார். சீக்கிரத்தில்
அவனுடைய உடம்பு சூடாகிறது, அவன் ஏழு தடவை தும்முகிறான். அவனுடைய அம்மா
உள்ளே வந்து பையன் உயிரோடு இருக்கிறதைப் பார்க்கிறாள், மகனைப் பார்த்ததும்
அவளுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை!
இதுவரை எத்தனையோ ஆட்கள்
செத்துப் போயிருக்கிறார்கள். இதனால் அவர்களுடைய குடும்பத்தாரும்
நண்பர்களும் அதிக வேதனை அடைந்திருக்கிறார்கள். அப்படிச் செத்துப்
போனவர்களைத் திரும்ப உயிருக்குக் கொண்டு வர நமக்குச் சக்தியில்லை. ஆனால்
யெகோவாவுக்குச் சக்தி இருக்கிறது. அந்தச் சக்தியை வைத்து கோடிக்கணக்கான
ஆட்களை அவர் எப்படி மறுபடியும் உயிருக்குக் கொண்டு வருவார் என்பதைப் பிறகு
நாம் படிப்போம்.
1 இராஜாக்கள் 17:8-24; 2 இராஜாக்கள் 4:8-37.
கேள்விகள்
- படத்திலுள்ள மூன்று பேர் யார், அந்தச் சின்னப் பையனுக்கு என்ன நடக்கிறது?
- அந்தப் பையனுக்காக எலியா என்ன கேட்டு ஜெபிக்கிறார், அடுத்து என்ன நடக்கிறது?
- எலியாவின் உதவியாளர் யார்?
- சூனேமிலுள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு எலிசா ஏன் அழைக்கப்படுகிறார்?
- எலிசா என்ன செய்கிறார், செத்துப்போன அந்தப் பிள்ளைக்கு என்ன சம்பவிக்கிறது?
- எலியாவும் எலிசாவும் செய்த காரியங்கள் யெகோவாவின் என்ன சக்தியைக் காட்டுகின்றன?
கூடுதல் கேள்விகள்
- ஒன்று இராஜாக்கள் 17:8-24-ஐ வாசி. (அ) எலியாவின் கீழ்ப்படிதலும் விசுவாசமும் எப்படிச் சோதிக்கப்பட்டன? (1 இரா. 17:9; 19:1-4, 10)
(ஆ) சாறிபாத் விதவையின் விசுவாசம் ஏன் குறிப்பிடத்தக்கது? (1 இரா. 17:12-16; லூக் 4:25, 26)
(இ) சாறிபாத் விதவையைப் பற்றிய விஷயம், மத்தேயு 10:41, 42-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள் உண்மை என்பதை எப்படிக் காட்டுகிறது? (1 இரா. 17:10-12, 17, 23, 24)
- இரண்டு இராஜாக்கள் 4:8-37-ஐ வாசி.
(அ) உபசரிப்பதைப் பற்றி சூனேம் நகரத்து பெண்ணின் உதாரணம் நமக்கு என்ன
கற்பிக்கிறது? (2 இரா. 4:8; லூக் 6:38; ரோ. 12:13; 1 யோ. 3:17)
(ஆ) இன்று கடவுளுடைய ஊழியர்களுக்கு எந்த வழிகளிலெல்லாம் இரக்கத்தைக் காட்டலாம்? (அப். 20:35; 28:1, 2; கலா. 6:9, 10; எபி. 6:10)
No comments:
Post a Comment