Monday, 9 December 2013

ஒரு தீவில் கப்பற்சேதம்

ஒரு தீவில் கப்பற்சேதம்

அதோ பார்! அந்தக் கப்பல் ஆபத்தில் இருக்கிறது! துண்டு துண்டாக உடைந்து கொண்டிருக்கிறது! தண்ணீருக்குள் குதித்திருக்கிற அந்த ஆட்களை உன்னால் பார்க்க முடிகிறதா? சிலர் ஏற்கெனவே கரைக்கு நீந்தி வந்துவிட்டார்கள். அங்கே வருவது பவுலா? அவருக்கு என்ன நடந்துவிட்டது? நாம் பார்க்கலாம்.
கப்பற்சேதத்திலிருந்து தப்பியவர்கள்
கப்பற்சேதத்திலிருந்து தப்பியவர்கள்

பவுல் இரண்டு ஆண்டுகளுக்கு செசரியாவில் கைதியாக வைக்கப்பட்டிருந்தார் இல்லையா? அதன் பிறகு அவரும் கைதிகள் சிலரும் ஒரு கப்பலில் ஏற்றப்படுகிறார்கள், அவர்கள் ரோமாபுரிக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். கப்பல் கிரேத்தா தீவுக்குப் பக்கத்தில் போகும்போது, ஒரு பயங்கர புயல் காற்று அவர்களைத் தாக்குகிறது. காற்று ரொம்ப ரொம்ப பலமாக அடிப்பதால் அந்த ஆட்களால் கப்பலை சரியான திசையில் செலுத்த முடியவில்லை. பகலில் சூரியனையும் இரவில் நட்சத்திரங்களையும் அவர்களால் பார்க்க முடியவில்லை. இப்படியே பல நாட்கள் செல்கிறது. கடைசியில், அவர்கள் எல்லோருக்கும் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லாமல் போய்விடுகிறது.
அந்தச் சமயத்தில் பவுல் எழுந்து நின்று: ‘உங்களில் யாருமே உயிரை இழக்க மாட்டீர்கள். கப்பல் மாத்திரமே சேதமாகும். ஏனென்றால் நேற்று ராத்திரி கடவுளுடைய தூதன் ஒருவர் என்னிடம் வந்து, “பவுலே, பயப்படாதே! ரோம ஆட்சியாளனான இராயனுக்கு முன் நீ நிற்க வேண்டும். உன்னோடு பயணம் செய்கிற எல்லோரையும் கடவுள் காப்பாற்றுவார்” என்று சொன்னார்’ என்கிறார்.
புயல் தொடங்கி 14-வது நாள் நடு ராத்திரியில், தண்ணீரின் ஆழம் குறைந்து கொண்டே வருவதைக் கப்பலோட்டிகள் கவனிக்கிறார்கள்! இருளில் பாறைகள் எவற்றிலாவது கப்பல் மோதி விடுமோ என்ற பயத்தில் அவர்கள் நங்கூரங்களைப் போடுகிறார்கள். அடுத்த நாள் காலையில் ஒரு கரையைப் பார்க்கிறார்கள். அந்தக் கரையை நோக்கி கப்பலைச் செலுத்த அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.
கரையை நெருங்க நெருங்க, மணலில் கப்பல் சிக்கிக்கொள்கிறது. பிறகு அலைகள் அதன் மீது பலமாய் மோதி கப்பலைத் துண்டு துண்டாக உடைத்து விடுகிறது. படைத் தளபதி எல்லோரையும் பார்த்து: ‘நீந்த முடிந்தவர்கள் எல்லோரும் முதலாவதாகக் கடலில் குதித்து கரைக்கு நீந்திப் போங்கள். மற்றவர்கள் எல்லோரும் அவர்களுக்குப் பின் குதித்து, கப்பலிலிருந்து உடைந்து வரும் மரத்துண்டுகளைப் பிடித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்கிறார். சொன்னபடியே அவர்கள் செய்கிறார்கள். இவ்வாறு கப்பலில் இருந்த 276 பேரும் அந்தத் தேவதூதன் வாக்குக் கொடுத்தபடியே பத்திரமாய்க் கரைக்குப் போய்ச் சேருகிறார்கள்.
இந்தத் தீவு மெலித்தா என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள மக்கள் ரொம்ப அன்பானவர்கள், கப்பலிலிருந்து வருகிறவர்களை நன்றாய்க் கவனித்துக் கொள்கிறார்கள். வானிலை சற்று சரியான பின், பவுல் மற்றொரு கப்பலில் ஏற்றப்பட்டு ரோமாபுரிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
அப்போஸ்தலர் 27:1-44; 28:1-14.


கேள்விகள்

  • பவுல் பயணம் செய்துகொண்டிருக்கிற கப்பல் கிரேத்தா தீவுக்குப் பக்கத்தில் போகும்போது என்ன நடக்கிறது?
  • கப்பலில் இருப்போரிடம் பவுல் என்ன சொல்கிறார்?
  • அந்தக் கப்பல் எப்படித் துண்டு துண்டாக உடைந்து போகிறது?
  • படைத்தளபதி எல்லோரையும் பார்த்து என்ன சொல்கிறார், எத்தனை பேர் பத்திரமாக கரை சேருகிறார்கள்?
  • அவர்கள் கரை சேருகிற அத்தீவின் பெயர் என்ன, வானிலை சற்று சரியான பின், பவுல் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்?

கூடுதல் கேள்விகள்

  • அப்போஸ்தலர் 27:1-44-ஐ வாசி. ரோமாபுரிக்கு பவுல் கடற்பயணம் செய்தது பற்றி நாம் வாசிக்கையில், பைபிள் பதிவு திருத்தமானது என்ற நம்பிக்கை எப்படிப் பலப்படுகிறது? (அப். 27:16-19, 27-32; லூக். 1:1-4; 2 தீ. 3:16, 17)
  • அப்போஸ்தலர் 28:1-14-ஐ வாசி. அப்போஸ்தலன் பவுலுக்கும் அவருடன் கப்பற்சேதத்தில் மாட்டிக் கொண்டவர்களுக்கும் புற மதத்தவரான மெலித்தா தீவார் ‘அசாதாரண தயவைக்’ காட்டியிருக்கிறார்கள் என்றால், கிறிஸ்தவர்கள் என்ன குணத்தைக் காட்ட வேண்டும், முக்கியமாக எந்த விதத்தில் காட்ட வேண்டும்? (அப். 28:1, 2; எபி. 13:1, 2; 1 பே. 4:9)

No comments:

Post a Comment