Wednesday, 4 December 2013

எல்லாவற்றையும் கடவுள் உண்டாக்கத் தொடங்குகிறார்

எல்லாவற்றையும் கடவுள் உண்டாக்கத் தொடங்குகிறார்

நம்மிடமுள்ள நல்ல நல்ல பொருட்கள் எல்லாமே கடவுள் உண்டாக்கியவை. பகலில் வெளிச்சத்தைக் கொடுக்க அவர் சூரியனை உண்டாக்கினார், இரவில் ஓரளவு வெளிச்சம் இருப்பதற்காக சந்திரனையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அதுமட்டுமல்ல, நாம் தொடர்ந்து உயிர் வாழ்வதற்காக இந்தப் பூமியையும் உண்டாக்கினார்.
ஆனால், கடவுள் முதன்முதலில் உண்டாக்கியது சூரியனையோ, சந்திரனையோ, நட்சத்திரங்களையோ, பூமியையோ அல்ல. அப்படியானால், முதலாவதாக அவர் எதை உண்டாக்கினார், உனக்குத் தெரியுமா? அவரைப் போன்ற ஆட்களையே உண்டாக்கினார். கடவுளை நாம் பார்க்க முடியாது, அதைப் போலவே இந்த ஆட்களையும் நாம் பார்க்க முடியாது. இவர்களைத் தேவதூதர்கள் என பைபிள் அழைக்கிறது. தம்முடன் பரலோகத்தில் வாழ்வதற்காக கடவுள் இந்தத் தேவதூதர்களை உண்டாக்கினார்.
கடவுள் உண்டாக்கிய முதல் தேவதூதர் மிகவும் விசேஷித்தவராக இருந்தார். அவரே கடவுளுடைய முதல் குமாரன், அவர் தம்முடைய தகப்பனோடு வேலை செய்தார். எல்லாவற்றையும் உண்டாக்குவதில் அவருக்கு உதவியாக இருந்தார். சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும், பூமியையும் உண்டாக்குவதில் கடவுளுக்கு உதவியாக இருந்தார்.
ஆரம்பத்தில் இந்தப் பூமி எப்படி இருந்தது தெரியுமா? யாருமே அதில் வாழ முடியாத நிலையில் இருந்தது. முழு பூமியும் தண்ணீரால் நிரம்பியிருந்தது. ஆம், இந்தப் பூமி ஒரு பெரிய கடலாக இருந்தது, வேறு எதுவும் அதில் இருக்கவில்லை. ஆனால் ஜனங்கள் பூமியில் வாழ வேண்டும் என்று கடவுள் விரும்பினார். எனவே நமக்காக பூமியைத் தயார் செய்ய ஆரம்பித்தார். அவர் என்ன செய்தார் தெரியுமா?
முதலாவது, பூமிக்கு வெளிச்சம் தேவையாக இருந்தது. அதனால், சூரியனிலிருந்து வரும் வெளிச்சத்தை பூமியின் மீது அவர் பிரகாசிக்கச் செய்தார். இதன் மூலம் இரவையும் பகலையும் உண்டாக்கினார். பிறகு கடலுக்கு மேல் நிலத்தை எழும்பச் செய்தார்.
ஆரம்பத்திலே, அந்த நிலத்தில் எதுவும் இருக்கவில்லை. நீ இங்கே பார்க்கிற இந்தப் படத்தைப் போலத்தான் இருந்தது. அதில் பூக்களோ மரங்களோ மிருகங்களோ எதுவுமே இருக்கவில்லை. கடலில் ஒரு மீன்கூட இருக்கவில்லை. மிருகங்களும் மக்களும் பூமியில் உயிர் வாழ்வதற்கு அதை மிக அருமையான ஓர் இடமாக மாற்ற கடவுள் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது.
எரேமியா 10:12; கொலோசெயர் 1:15-17; ஆதியாகமம் 1:1-10.
வெறுமையான நிலம்
வெறுமையான நிலம்  

கேள்விகள்

  • எல்லா நல்ல பொருட்களும் யார் தந்தவை, ஓர் உதாரணம் சொல்ல முடியுமா?
  • முதன்முதலாக கடவுள் யாரை உண்டாக்கினார்?
  • முதல் தேவதூதர் ஏன் விசேஷமானவர்?
  • ஆரம்பத்தில் இந்தப் பூமி எப்படி இருந்தது என்று சொல். (படத்தைப் பார்.)
  • மிருகங்களும் மக்களும் வாழ இந்தப் பூமியைக் கடவுள் எப்படித் தயார் செய்ய ஆரம்பித்தார்?

கூடுதல் கேள்விகள்

  • எரேமியா 10:12-ஐ வாசி. கடவுளுடைய படைப்பிலிருந்து அவருடைய என்னென்ன குணங்களைத் தெரிந்துகொள்ளலாம்? (ஏசா. 40:26; ரோ. 11:33)
  • கொலோசெயர் 1:15-17-ஐ வாசி. எல்லாவற்றையும் கடவுள் படைக்கையில் இயேசு என்ன செய்து கொண்டிருந்தார், ஆகவே அவரை எப்படிப்பட்டவராக நாம் எண்ண வேண்டும்? (கொலோ. 1:15-17)
  • ஆதியாகமம் 1:1-10-ஐ வாசி. (அ) பூமி எப்படித் தோன்றியது? (ஆதி. 1:1)
    (ஆ) படைப்பின் முதல் நாளில் என்ன நடந்தது? (ஆதி. 1:3-5)
    (இ) படைப்பின் இரண்டாம் நாளில் என்ன நடந்தது என்று சொல். (ஆதி. 1:7, 8)

No comments:

Post a Comment